Monday, August 21, 2023

மனிதன் பேராசைக்காரன்.

எறும்புதின்னி இருக்கிறதே அது ஒரு எறும்பு புற்றுக்குப் போனால், எல்லா எறும்புகளையும் தின்று விடாது. எறும்புகள் தன்னை ஏறி கடிக்கும் வரையில் தின்று விட்டு பின் அடுத்த புற்றை நோக்கிப் போய்விடும்.

அப்படியேதான் எல்லாப் புற்றிலும் செய்யும். காரணம், எறும்புக்கடிக்குப் பயந்து அல்ல. எல்லா எறும்புகளையும் தின்று அழித்து விட்டால், மீண்டும் அங்கே எறும்புகள் பெருகுவது தடைப்பட்டுப் போய்விடும். பின்னர் அதற்கு உணவு கிடைப்பது அரிதாகி விடும்.

ஒட்டகச்சிவிங்கியும் அப்படித்தான். ஒரு மரத்திலேயே நிறைய கிடைக்கிறதே என்று மரத்தை மொட்டையடித்து விடாது. மரம் ஒளிச்சேர்க்கை செய்து தழைக்க வழி செய்ய, ஒவ்வொரு மரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகவே இலைகளைக் கபளீகரம் செய்யும்.

ஆனால், மனிதன்...?



Tuesday, April 27, 2021

 


ஓசோன் சிதைவு (Ozone Layer Depletion)

ஓசோன் படலம், ஓசோன் படலம்னு சொல்றாங்களே... அதுல ஓட்டை வேற விழுகுதுன்னு சொல்றாங்களே.... நாம ராக்கெட்லாம் விடுறோமே அதுனாலதான் அதுல ஓட்டை விழுகுதா?

கேள்வி சிரிப்பு வர்ற மாதிரி இருந்தாலும், இதைக் கேட்டதாலதான் நாம தெளிவடையப்போறோம். முதல்ல ஓசோன் அப்டீன்னா என்னன்னு பாத்துருவோம்.

நமக்கெல்லாம் ஆக்சிஜன்(Oxygen)னா என்னன்னு தெரியும். தமிழ்ல உயிர்வளின்னு சொல்லுவோம். அது எப்பயும் ரெட்டையாத்தான் இருக்கும். அதான் அதுக்கு அவஸ்தை இல்லாத சாஸ்வதமான நிலை. அதைக் குறியீடா சொல்லும்போது O↓2. (Oக்கு அடுத்து அடிமானத்துல 2 போட்டுக்கனும்)

ஆனா, ரொம்ப அரிதா, இந்த ஆக்சிஜன் ஒரே ஒரு அணுநிலை (Nascent)ஆக்சிஜனாவும், முவ்வணுநிலை (Trioxygen) ஆக்சிஜனாவும் இருக்கும். இது நிலையானது இல்லை.

ஏன்னா, போதுமான எலக்ட்ரான்களோட திருப்தியா இருக்கத்தான் எல்லா அணுக்களும் விரும்பும். போதுமான எலக்ட்ரான்கள் இல்லாட்டியோ, குறைந்தபட்சம் பகிர்ந்துகொள்ளும் எலக்ட்ரான்கள் இல்லாட்டியோ அது பயங்கரமான பசியோட இருக்கும். எதையாச்சும் பிடிச்சு இழுத்து போதுமான எலக்ட்ரான் கிடைக்கிற மாதிரி செஞ்சுக்கிட்டு நிலையான தன்மைக்குப் போகத்தான் பார்க்கும்.

மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து இருக்குற நிலையைத்தான் ஓசோன்(Ozone)னு சொல்றோம். தமிழ்ல கமழின்னு சொல்வோம். இது நிலையா (Stable) இருக்காதுன்னு சொன்னேன். அதுனால, பூமியில இதை சாதாரணமா பாக்க முடியாது. ஒரு வேளை ஓசோன் உருவானாக்கூட அது டக்குனு பக்கத்துல என்ன கிடைக்குதோ அதுல இருந்து ஒரு எலக்ட்ரானை எடுத்துக்கிட்டு வேற ஒன்னா மாறிரும்.

உதாரணமா சொல்றதுன்னா, நடிகர் செந்தில் ஒரு படத்துல எல்லார்கிட்டயும் பத்துக்காசு கேப்பாரு. அவரு பத்துக் காசுல திருப்தியா இருப்பாரு. பத்துக்காசுக்கு மேல எவ்ளோ கொடுத்தாலும் பத்துக் காசை மட்டும் வச்சுக்கிட்டு மிச்சத்தைத் தூக்கிப் போட்டுருவாரு. பத்துக்காசுக்கு கீழ கொடுத்தா வாங்க மாட்டாரு. பத்துக்காசு கொடுக்குற வரைக்கும் விடவும் மாட்டாரு.

அது மாதிரிதான் ஆக்சிஜன் ஒத்தையா இருந்துச்சுன்னா, இன்னொரு ஒத்தையா இருக்குற ஆக்சிஜனைப் பிடிச்சுக்கிட்டு ரெட்டை ஆக்சிஜனா மாறி நிம்மதியா இருந்துரும். அப்படி நிம்மதியா இருக்குற ஆக்சிஜன் இன்னொரு ஆக்சிஜனைத் தேடிப் போகாது. ஆனா, எதாச்சும் புறத் தூண்டுதல்னால மூணாவது ஆக்சிஜன் அது கூட சேர்க்கப்பட்டு ஓசோனா மாறுச்சுன்னா, எப்டீயாச்சும் அந்த மூணாவது ஆக்சிஜனைத் தள்ளிவிடத்தான் பார்க்கும். தள்ளியும் விட்டுரும்.

சரி, இப்ப ஓசோன் எப்படி உருவாகுது. வளிமண்டலத்துல பூமியில இருந்து 15 கிலோமீட்டர் உயரத்துல துவங்கி 50 கிலோ மீட்டர் உயரம் வரைக்கும் இருக்குற அடுக்குக்குப் பெயர் படைமண்டலம் (Stratosphere). இங்கதான் ஓசோன் உருவாகுது. எப்டீன்னு பார்த்தா, சூரியன்ல இருந்து வர்ற புறஊதாக்குறுவலைகள் ஆக்சிஜனுடன் (O↓2) வினைபுரிஞ்சு அதனை இரண்டாப் பிரிக்குது. அப்படிப் பிரிஞ்ச ஒற்றை ஆக்சிஜன் மற்றொரு இரட்டை ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோனாக மாறுகின்றது.

O↓2 + photon (radiation λ < 240 nm) → 2 O

O + O↓2 + M → O↓3 + M

இங்க Mங்குறது வினையில விளையுற அதிகப்படியான சக்தியைக் கடத்திச் செல்லும் ஏதேனும் ஒரு கடத்தி. இப்படி உருவாகுற ஓசோன், நிலையா இருக்காம, மறுபடியும் ஒரு ஒத்தை ஆக்சிஜன் கூட சேர்றதுனால, ரெட்டை ஆக்சிஜனா மாறிரும்.


O↓3 + O → 2O↓2


இப்டீயே இந்த நிகழ்வு மாறி மாறி நடந்துக்கிட்டு இருக்குறதுனால, இந்த ஸ்ட்ரேட்டோஸ்பியர்ல ஓசோன் ஒரு படலமா அப்டீயே பரவி இருக்கு. படலம்னா, ஒரு மெல்லிய அடுக்கா, 2ppmல இருந்து 8ppm வரைக்கும் இருக்கும். இங்க இருக்குற ஒட்டுமொத்த ஓசோனையும் கீழ கடல்மட்டத்துக்கு கொண்டு வந்தோம்னா, அழுத்தத்தின் காரணமா, இரு 3 மில்லிமீட்டர் தடிமனுக்குதான் வரும்.


ஓசோன் என்ன பண்ணுது?

சூரியன்ல இருந்து வர்ற புறஊதாக் கதிர்களை இது ஈர்த்துக்குறதுனால நாமள்லாம் அந்தக் கதிர்ல இருந்து பாதுகாக்கப்படுறோம். புறஊதாக் கதிர்கள் அவ்ளோ ஆபத்தான்னு கேட்டா. ஆமாம், ஆபத்துதான். அதுக்கு முன்னாடி இந்த புறஊதாக் கதிரை அலைநீளத்தைப் பொறுத்து மூணு விதமா வகை பிரிச்சுருக்குறதைப் பார்த்துருவோம்.

  1. UV-A (400–315 நானோமீட்டர்கள்)
  2. UV-B (315–280 நானோமீட்டர்கள்)
  3. UV-C (280–100 நானோமீட்டர்கள்)

இது போக Vacuum UV (10–100 நானோமீட்டர்கள்)னு ஒன்னு இருக்கு. இதை காற்றிலுள்ள நைட்ரஜனே வடிகட்டிவிடும். ஆனால், மேலே சொன்ன அந்த மூணு வகைகளும் நைட்ரஜனையும் ஊடுருவிக்கிட்டு போயிரும்.

UV-A ரொம்ப ஒன்னும் ஆபத்து இல்லாதது. ஆனாலும், நம்ம தோல் மேல தொடர்ந்து படும்போது மட்டும் ஏதாச்சும் பாதிப்பு ஏற்படும். தோல் சுருங்கி சீக்கிரமே வயசான தோற்றத்தைக் கொடுக்கும். இது ஓசோனை படலத்தைத் தாண்டியும் பூமிக்கு வரும்.

UV-B கொஞ்சம் ஆபத்தானது. தோல் வெந்து போயிரும், நம்ம திசுக்கள்ல உள்ள DNAக்களைப் பாதிக்கும். காடராக்ட் வரும், உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். ஓசோன் கொஞ்சம் தடுத்தது போக மீதி சிறிது பூமிக்கு வரும். பூமி மேல இருக்குற உயிரினங்களுக்கு இது கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதான் நம் தோல் வைட்டமின்-D தயாரிக்கிறதுக்கு உதவியா இருக்குறதும்.

UV-C இது ரொம்ப ஆபத்தானது. ஆனா, ஓசோன் இதை முழுசா உறிஞ்சித் தடுத்துறதுனால இது பூமியோட தரைக்கு வராது. வந்தா, தோல் சம்பந்தமான வியாதிகளை உண்டு பண்ணும். ஸ்கின் கான்சர் ஏற்படும். (Basal Cell Carcinoma, Squamous Cell Carcinoma, Melanoma)


ஓசோன் படலத்துல ஓட்டைன்னா என்ன?

ஓட்டைன்னா துணியில விழுற ஓட்டை மாதிரி இல்லை, ஆனா, அதை ஒரு உருவகமா எடுத்துக்கலாம். மெல்லிய படலம் மாதிரி ஓசோன் பரவி இருக்கும்போது, சில காரணிகளால அந்த ஓசோன் சிதைக்கப்பட்டு, ஓசோன் உருவாகுற வேகத்தை விட அது அழிந்துபட்டுப் போற வேகம் அதிகமா இருந்துச்சுன்னா, அந்தக் குறிப்பிட்ட இடத்துல ஓசோன் செறிவு குறைஞ்சு போயிரும்.

அப்ப அதுவழியா புறஊதாக் கதிர்கள் பூமிக்குள்ள ஊடுருவி வந்துரும். அதுனால, அதை ஓட்டைன்னு சொல்றோம்.


ஓசோன் படலத்துல ஏன் ஓட்டை விழுகுது?

Free Radical Elementsனு சொல்லப்படுற நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரஸ் ஆக்சைடு (N↓2O), ஹைட்ராக்சைல் (OH), அணுநிலை க்ளோரின் (Cl), அணுநிலை ப்ரோமைன் (Br) ஆகியவைகள் இந்த ஓசோனைக் கபளீகரம் செய்து விடும்.

ஏன்னு பாத்தா, அவைகளோட தன்மை அப்படி. அதிதீவிரமா வினை புரியக்கூடியவை அவை. காரணம், அவைகளோட எலக்ட்ரான் சுற்றுப்பாதையில போதுமான எலக்ட்ரான் இருக்காது. நிலைப்படனும்னா எதுல இருந்தாவது எலக்ட்ரானை எடுத்துக்கனும். இதுக்கு இருக்குற தேவையைப் பார்க்கும்போது இது எடுத்துக்கும்னு சொல்ல முடியாது, பறிச்சுக்கும். ஆமா, அவ்வளவு வெறியோட பறிக்கும்.

சரி, இதெல்லாம் எங்கேருந்து வருதுன்னு பார்த்தா, எல்லாம் நாம உற்பத்தி வேதியல் பொருட்களில் இருந்துதான். Ozone Depleting Substances (ODS)னு சொல்வாங்க. என்னென்னன்னு பார்த்தா,

  1. Chlorofluorocarbons (CFCs)
    • நம்ம ஃப்ரிட்ஜ், ஃப்ரீஸர், ஏர் கண்டிஷனர்லலாம் இதைப் பயன்படுத்துனோம். ஆமா, 1995க்கு முன்னாடிலாம் இதுதான் கூலன்ட்டா பயன்பட்டுச்சு. இதுதான், 80% ஓசோன் சிதைவுக்கு காரணமா இருக்கு. தொழிற்சாலையில் பயன்படுத்தும் கரைப்பான்கள் (Solvents), ட்ரை க்ளீனிங் பொருட்கள், மருத்துவமனை நுண்ணுயிர்நீக்கிகள் (Sterilants) போன்றவற்றிலும் இது இருக்கு.
  2. Halons
    • சில தீயணைப்பான்கள்ல இது பயன்படுத்தப்படுது. தண்ணீர் மற்றும் சில வேதியல் பொருட்களைப் பயன்படுத்த முடியாத தீ விபத்துகளில் இது பயன்படுத்தப்படும். CFCsக்கு இணையா இதுவும் பெரும் பாதிப்பை ஓசோம் படலத்துக்கு கொடுக்கும்.
  3. Mehtyl Chloroform
    • தொழிற்சாலைகளில், ஆவிக்கொழுப்புநீக்கியாகவும் (Vapour Degreaser), ஏரோசால்களிலும் இது பயன்படுத்தப்படும்.
  4. Carbon Tetrachloride
    • சில கரைப்பான்களிலும், தீயணைப்பான்களிலும் இது பயன்படுத்தப்படும்.
  5. Hydrochlorofluorocarbons (HCFCs)
    • CFCsக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த HCFCs குறைந்த அளவே ஓசோன் படலத்துக்கு ஊறு விளைவிக்கும். பசுமைக்குடில் விளைவுக்கு இது துணை போய் புவிவெப்ப உயர்வுக்கு இது காரணமாக இருக்கும்.

இவைகள் எல்லாம் பூமியில ரொம்ப ஆபத்தில்லாத பொருட்கள். நிலையானவைகள். விஷமற்றவைகள். நிலையா இருக்குறதுனால, அது அப்டீயே காத்துல மிதந்து மேலே மேலே போயி ஸ்ட்ரேட்டோஸ்பியருக்குப் போனதும், அங்கே புறஊதாக்கதிர்கள்னால உடைக்கப்பட்டு அணுநிலைக் க்ளோரினாவோ, ப்ரோமினாவோ உருவானா அவ்வளவுதான்.

ஓசோனை பலமடங்கு அபாயகரமான வேகத்துல தின்னு தீர்த்துரும். ஒரே ஒரு க்ளோரின் மூலக்கூறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைச்சுரும்.

இந்த ODS நீண்ட காலத்துக்கு நம்ம வளிமண்டலத்துல இருக்கும். நீண்ட காலம்னா, நூற்றாண்டுக்கும் மேற்பட்டு இருக்கும். கடந்த 80 வருசத்துல நாம இப்டீ உருவாக்குன ODS எவ்ளோ இருக்கும், எவ்ளோ காலம் இருக்கும்னு ஒரு குத்துமதிப்பா கணக்குப் போட்டுப் பாத்துக்குங்க.

ஆக, ஓசோன் படலத்தை, நாம விடுற ராக்கெட்டோ, ஜெட் விமானமோ போய்க் கிழிக்கிறது இல்லை. நம்மோட பொறுப்பில்லாத்தனத்தால அபாயகரமான பொருட்களை உண்டு பண்ணி, நமக்கு நன்மை தர்ற ஓசோன் படலத்தைச் சிதைச்சுட்டு... ஓசோன்ல ஓட்டை விழுந்துருச்சுன்னு, என்னவோ அதுவா விழுந்த மாதிரி சொல்றோம்.


மேலதிகச் செய்திகள்

  1. மார்கழி மாசத்துல ஓசோன் கீழ வரும் அதுனாலதான் விடியக்காலையில எந்திரிச்சு குளிச்சுட்டு கோலம் போடுறதுன்னு நம்ம முன்னோர்கள் வகுத்து வச்சுருக்காங்கன்னு ஒரு கதை சொல்வாங்க.
    • நாம மேலே பாத்த ஸ்ட்ரேட்டோஸ்பியர் ஓசோன் கீழ வராது. வந்தாலும் ரொம்ப ரொம்பக் குறைவு, அரிது. ஆனா, ட்ரோபோஸ்பியர் ஓசோன்னு சொல்லக்கூடிய, கீழேயே நாம உருவாக்குற ஓசோனும், சில தாவரங்கள் வெளிவிடுற ஹைட்ரோகார்பன்கள்ல இருந்து வர்ற ஓசோனும் உண்டு. ஆனா, இந்த ஓசோன் ஒன்னும் நல்லது இல்லை. நமக்கு சுவாசப் பிரச்சனைகளை உண்டு பண்ணும். பயிர்களுக்கும் காடுகளுக்கும் கேடு விளைவிக்கும். நைலான், ரப்பர் போன்ற பொருட்களை அழிக்கும். நம் உடல் திசுக்களையும் சிதைக்கும்.
    • ஏற்கனவே சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள், வீட்டிற்கு வெளியே உடற்பயிற்சி செய்தால் நிலைமை இன்னும் மோசமாகும். தாவரங்களின் Stomata பகுதியை அடைத்து விடும். இதன் வழியாகத்தான் கார்பன்டையாக்சைடு உள்ளே செல்லும். இது தடைபட்டுப் போவதால் ஒளிச்சேர்க்கை நடக்காது போய் தாவரம் பாதிப்பிற்கு உள்ளாகும்.
  2. க்ளோரின் போட்டு ப்ளீச்சிங் பண்ணும்போது, கறையெல்லாம் போயி பளிச்சுனு வெள்ளையாகுறதுக்குக் காரணம் க்ளோரின் இல்லை. க்ளோரினோடு நீர் வினைபுரியும்போது உருவாகுற ஒற்றை ஆக்சிஜன்தான் காரணம். கறைங்குறது சில அலைநீளங்கள் கொண்ட ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்ட க்ரோமோஃபோர்கள் (Chromophores). ஒற்றை ஆக்சிஜன் நிலையற்றதுன்னு பார்த்தோம். அது நிலை பெறுவதற்காக எதுகூடவாவது சேரத் துடிக்கும்போது, இந்தக் க்ரோமோஃபோர்களோடு வினைபுரிந்து ஒளி உறிஞ்சும் தன்மையைப் பாதிக்கும். விளைவு கறை போய்விடுகிறது.
  3. வீட்டில் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கும் தண்ணீர் சில நாட்களில் கெட்டுப் போய் விடுகின்றது. ஆனால், ஊருணி நீர் திறந்தவெளியில் இருந்தாலும் கெட்டுப் போவதில்லை. காரணம், சூரியனில் இருந்து வரும் UV-B கதிர்கள்தான் காரணம். ஊருணி நீரில் இருக்கும் நுண்ணுயிரிகளைத் தாக்கி அழித்து விடும்.


படம் எடுக்கப்பட்ட தளம் :
http://upload.wikimedia.org/wikipedia/commons/e/ea/NASA_and_NOAA_Announce_Ozone_Hole_is_a_Double_Record_Breaker.png


Monday, April 26, 2021

 


அணு எடை (Atomic Weight)

மாதவன் ஸ்ரீரங்கம் என்பாரின் அணு குறித்த சில கேள்விகளுக்கான சுருக்கப்பதில்கள்.

அணுவின் எடை குறித்து பேசும்பொழுது நம் அன்றாட வாழ்வில் உணரும் எடைகளோடு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அணுவின் எடை என்பது மீச்சிறு மதிப்பைக் கொண்டது.

1. அணுவின் எடை என்ன?

சரி, முதலில் நிறை என்றால் என்ன, எடை என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

இயற்பியலில்,
நிறை என்பது ஒரு பொருளின் கொள்ளளவைக் குறிக்கின்றது. உதாரணமாக நம் உடலுக்குள் இருக்கும் மொத்த பொருட்கள்தான் நம் நிறை. இதன் மதிப்பு மாறாதது. இதன் அலகு கிலோகிராம்(Kilogram).

எடை என்பது நிறையின் மீது செயல்படும் ஈர்ப்புவிசையின் அளவு. உதாரணமாக நம் உடலின் எடை பூமியில் 60 கிலோ என்றால், நம் நிறை 6.118 கிலோகிராம்தான். அதன் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசை 9.8 N/Kg. எடையின் மதிப்பு இடந்தோறும் மாறக்கூடியது. புவியின் மையப்பகுதிக்கு நெருங்குந்தோறும் (துருவப்பகுதிகள்) அதிகமாகவும், விலகுந்தோறும் (பூமத்தியரேகை) குறைவாகவும் இருக்கும். வெவ்வேறு கிரகங்களின் ஈர்ப்புவிசைக்கேற்பவும் எடை மாறக்கூடும். இதன் அலகு Newton.

பொதுவாக நாம் பொருட்களை எடை போடுகையில், நிறையைத்தான் மறைமுகமாக அளக்கிறோம். அதாவது அந்த நிறையின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்புவிசையையே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அலகையும் கிலோகிராமில் குறிப்பிடுகிறோம்.

வேதியலில்,
அணுவின் நிறை என்பது, அதில் இருக்கும் புரோட்டான் மற்றும் நியூட்ரானின் எண்ணிக்கைகளையே குறிக்கும். உதாரணமாக கார்பன்-12ல் 6 புரோட்டான்களும், 6 நியூட்ரான்களும் இருக்கும். அப்படி எனில் கார்பன்-12ன் நிறை 12amu (Atomic Mass Unit).

அணுவின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையானது மிக மிக மீச்சிறு மதிப்பாகும். எனவே அணுவின் எடையைக் குறிப்பிடும்பொழுது அணுவின் நிறையையே அணுவின் எடையாகக் குறிப்பிடுவோம். ஆயினும், தனிமங்களுக்கு ஐசோடோப்புகள் இருப்பதால் அவற்றின் சராசரியை எடையாகக் குறிப்பிடுவோம்.

உதாரணமாக,

  • கார்பன்-12ல் 6 புரோட்டான்களும், 6 நியூட்ரான்களும் இருக்கின்றன. இதன் நிறை 12amu.
  • கார்பன்-14ல் 6 புரோட்டான்களும், 8 நியூட்ரான்களும் இருக்கின்றன. இதன் நிறை 14amu.

இரண்டிற்கும் ஒரே எடை என்று சொல்வது சரியாக இருக்காது. கார்பனைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 15 ஐசோடோப்புகள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். அவைகளின் நிறைகளின் சராசரியாக 12.011amu என்பதை எடை எனக் கொள்கிறோம்.

ஆக, தனிமத்தைப் பொறுத்து அதன் அணுநிறையும் அணுஎடையும் வேறுபடும்.

2. எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்களுக்கு எடையுண்டா ? அது என்ன ?

உண்டு. அவைகளின் நிறைதான் எடையும்.

புரோட்டான் நிறை : 1.672 621 71 x 10^−27 கிலோகிராம்
நியூட்ரான் நிறை : 1.674927351 × 10^−27 கிலோகிராம்
எலக்ட்ரான் நிறை : 9.10938291 x 10^−31 கிலோகிராம்

புரோட்டானும் நியூட்ரானும் ஒரே மாதிரியான அடிப்படைத் துகள்களைக் கொண்டிருந்தாலும் அவற்றின் விகிதாச்சார வேறுபாடு காரணமாக நிறை மீச்சிறு அளவில் வேறுபடும்.

புரோட்டான் இரண்டு Up Quark மற்றும் ஒரு Down Quarkயைக் கொண்டிருக்கும்.
நியூட்ரான் இரண்டு Down Quark மற்றும் ஒரு Up Quarkயைக் கொண்டிருக்கும்.


3. மாலிக்யூல்கள் என்றழைக்கப்படும் மூலக்கூறுகளுக்கு எடையுண்டா ? அது என்ன ?

அணுக்களின் கூட்டுத் தொகுப்பே மூலக்கூறு எனப்படும். அப்படி அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையே மூலக்கூறின் நிறையுமாகும்.

உதாரணமாக மீத்தேனை (Methane - CH↓4)எடுத்துக்கொள்வோம்.

கார்பன் (C)யின் நிறை 12.011.
ஹைட்ரஜன் (H)ன் நிறை 1.00794.
நான்கு ஹைட்ரஜன்களுக்கு 1.00794 x 4 = 4.03176

ஆக மொத்தம், 12.0114 + 4.03176 = 16.04276

4. அணுத்துகள்கள் என்பவற்றிற்கு எடையுண்டா ? அது என்ன?

எல்லாவற்றிற்கும் எடை இருக்கக்கூடும். நம் சக்தி மட்டும் அளவிடமுடிந்தவைகளுக்கு எடையைக் கண்டுணர்ந்திருக்கிறோம். ஃபோட்டான்(Photon), க்ளூவான்(Gluon), க்ராவிட்டான்(Graviton) போன்றவற்றிற்கு எடை கிடையாது என்கிறோம். க்ராவிட்டான் இன்னும் கற்பனைத் துகளாகவே இருக்கிறது.

5. இவற்றையெல்லாம் எப்படி அளக்கிறார்கள் ?

Mass Spectrometry என்றொரு முறை இருக்கிறது. அதன் மூலம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள். கருவியின் பெயர் Mass Spectrometer.

படம் எடுக்கப்பட்ட தளம் : https://www.thoughtco.com/thmb/kh2G_kvtudc-5RQmvDD5LNulRvA=/768x0/filters:no_upscale():max_bytes(150000):strip_icc():format(webp)/atom-57e1bb583df78c9cce33a106.jpg

Saturday, April 24, 2021

 


புடைநொடி (Parsec) என்றால் என்ன?

வானவியலில் ஒளியாண்டைப் (Light Year) போல இந்தப் புடைநொடியும் தொலைவை அளக்கும் ஒரு அலகாகும். PARallax of SECond என்பதின் முதல் எழுத்துகளைக் கொண்டு குறுக்கமாக இதன் பெயர் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு புடைநொடி என்பது 3.26 ஒளியாண்டுகள் ஆகும். பிரித்தானிய வானவியலாரான Herbert Hall Turner என்பவரால் 1913ல் இந்த அலகு பரிந்துரை செய்யப்பட்டது. எண்ணிப்பார்க்க முடியாத பெரும் தொலைவுகளைக் குறிக்க இந்த அலகு வானவியலிலும் (Astronomy), வானியற்பியலிலும் (Astrophysics) பெரிதும் பயன்படுகின்றது.

அதிலும், நமது உடுமண்டலத்தி(Galaxy)ற்குள்ளான தொலைவுகளை Parsec அளவிலும், நம் உடுமண்டலத்தைச் சுற்றியுள்ள தொலைவுகளை Kilo Parsec அளவிலும், அண்டை உடுமண்டலங்களை Mega Parsec அளவிலும், அதனைவிடத் தொலைவில் உள்ள உடுமண்டலங்கள், துடிப்பண்டங்கள் (Quasars) போன்றவற்றின் தொலைவுகளை Giga Parsec அளவிலும் குறிப்பிடுவார்கள்.

சரி, Parsec என்றால் என்ன என்று விளக்கமாகப் பார்ப்பதற்கு முன், இடமாறு தோற்றவழு (Parallax) என்றால் என்னவென்று ஒரு பார்வை பார்த்து விடுவோம்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு பொருளைப் பார்க்கும்போது ஏற்படும் இடமாற்றத் தோற்றமே பாரல்லாக்ஸ் எனப்படும். இதனை கோண அளவில் அளப்பார்கள். சிறு உதாரணம் மூலம் சொல்வதாயிருந்தால், உங்கள் கட்டை விரலை முகத்திற்கு நேராக நீட்டிப் பிடித்துக்கொண்டு ஒரு கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கட்டை விரலைப் பாருங்கள். அடுத்து, மறு கண்ணை மூடிக்கொண்டு இந்தக் கண்ணைத் திறந்து பாருங்கள். கட்டைவிரல் இடம் பெயர்ந்து இருப்பது போல் தோன்றும்.

உண்மையில் கட்டைவிரல் இடம் பெயரவில்லை. நாம்தான் இரு வேறு இடங்களில் இருந்து கட்டைவிரலின் நிலையான இடத்தைப் பார்த்தோம். ஆனால், கட்டைவிரல் இடம் பெயர்வது போல் தோன்றுவதால் இதனை இடமாறு தோற்றவழு என்கிறோம்.

இதனால் பயன் என்ன? முன்புறம் கண்கள் கொண்ட நமக்கு, இரு கண்களும் சற்று இடைவெளியில் அமைந்திருப்பதால், ஒரு பொருளின் தொலைவை மட்டுமல்லாது, அதன், ஆழத்தையும் சேர்த்து முப்பரிமாணக் (3 dimension) காட்சியைக் காண முடிகிறது. ஒரே வரிசையில், இருவேறு தொலைவுகளில் உள்ள பொருட்களின் அளவுகளை உணர்ந்து கொள்ளவும், அவற்றிற்கிடையே இருக்கும் தொலைவுகளை அனுமானிக்கவும் முடிகிறது.

நுட்பமுறைகளில் இந்த பாரல்லாக்ஸ் முறையினைக் கொண்டு பார்வையாளருக்கும், பார்க்கப்படும் பொருளுக்கும் இடையே உள்ள தொலைவை அளக்கலாம்.

அதற்கு முன், முக்கோண அளக்கை (Triangulation) என்றால் என்ன என்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம். ஒரு புள்ளியின் இடத்தை தெரிந்த இருவேறு தொலைவுகளில் இருந்து பார்க்கும்பொழுது ஏற்படும் கோணங்களைக் கொண்டு கணக்கிடுவது முக்கோண அளக்கை முறையாகும். இதற்கு முக்கோணவியல் (Trignometry) கணக்கீடுகள் உதவும். பிதாகரஸ் தேற்றம் (Pythagorus Theorem) படித்தவர்களுக்குத் தெரியும். ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிப்பகுதியின் நீளமும், குத்துயரத்திற்கு எதிரே உள்ள கோணமும் தெரிந்தால் குத்துயரத்தை அளந்து விடலாம்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்த முக்கோண அளக்கை முறையில்தான் அளந்தார்கள். 8840 மீட்டர் உயரம் என்று 1856ல் கண்டறியப்பட்ட உயரம், பிற்பாடு நவீன GPS முறையில் கணக்கிடப்பட்டு 8848 மீட்டர் உயரம் என்று அறிவிக்கப்பட்டது.

சரி, இப்பொழுது மீண்டும் பாரல்லாக்ஸ் முறைக்கு வருவோம். மேலே பார்த்த, முக்கோண அளக்கையின் ஒரு சிறப்பு முறைதான் பாரல்லாக்ஸ். என்ன ஒன்று, தொலை தூரத்து நட்சத்திரங்கள், காலக்ஸிகளின் தொலைவுகளை அளக்க இதைப் பயன்படுத்துவார்கள்.

Diurnal Parallax, Lunar Parallax, Solar Parallax, Moving-Cluster Parallax என்று சில முறைகள் இருக்கின்றன. அளக்க வேண்டிய தொலைவைப் பொறுத்து முறைகளைத் தெரிந்தெடுப்பார்கள்.

எப்படி அளப்பார்கள்?

தொலைவு அதிகம் என்பதால், பூமியிலேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு நட்சத்திரங்களின் தொலைவை அளக்க முடியாது. பின் என்ன செய்வது. பூமியை விட்டு வெளியே இரண்டு பெரும் தொலைவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதாவது சூரியன் ஒரு புள்ளியாகவும் பூமி ஒரு புள்ளியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை பூமியில் இருந்து ஒரு நேரத்தில் நோக்கும்பொழுது ஒரு கோணமும், மூன்று மாதங்கள் கழித்து அதே நேரத்தில் அந்த நட்சத்திரத்தை நோக்கும்பொழுது கோணவேறுபாடும் இருக்கும். அது என்ன மூன்று மாதங்கள் கணக்கு என்றால், அப்பொழுதுதான் ஒரு வானவியல் அலகு தூரத்தைக் கடந்திருப்போம். கணக்கீட்டிற்கு இந்தத் தொலைவும் நமக்கு வேண்டும்.

அதாவது, பாரல்லாக்ஸ் கோணவேறுபாடு மற்றும் வானவியல் அலகு இவற்றைக் கொண்டு அளக்கப்படும் தொலைவை புடைநொடியி(ParSec)ல் குறிப்பிடுவார்கள். கோணவேறுபாடு 1 பாகைநொடி இருக்கும்பொழுது கிடைக்கும் தொலைவு 1 புடைநொடி (1 ParSec) என்பார்கள். 

1 புடைநொடி = 3.26 ஒளியாண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.



படங்கள் எடுக்கப்பட்ட தளம் :
  • http://ta.wikipedia.org/wiki/படிமம்:புடைநொடி.png
  • http://en.wikipedia.org/wiki/File:Stellarparallax_parsec1.svg

 
மேலதிகச்செய்திகள்

  1. இந்தியாவை நிலஅளவை செய்வதற்காக Great Trignometrical Survey of India என்னும் திட்டம், ஏப்ரல் 10, 1802ல் துவங்கப்பட்டது. மூன்று வெவ்வேறு இடங்களில் தளம் அமைத்தனர். 
    • மெட்ராஸ் (சென்னை) புனித தோமையர் மலை மற்றும் பெரும்பாக்கத்திற்கான இடைப்பட்ட தொலைவு
    • கேரளாவின் தலச்சேரி மற்றும் கண்ணூருக்கான இடைப்பட்ட தொலைவு
    • எழிமலை (Delly) மற்றும் தடியண்டமோளுக்கான இடைப்பட்ட தொலைவு
  2. இந்தத் தளம் அமைப்பதற்கே நான்கு வருடங்கள் ஆயின. 5 வருடங்களில் அளவீடு செய்ய வேண்டும் என்று நினைத்தது, 60 வருடங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது.
  3. சென்னை, புனித தோமையர் மலை (St. Thomas Mount)யிலிருந்துதான், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது.


Friday, April 23, 2021

 


உறைநிலைக்குளிர் உறக்கம் (Cryonic Suspension)

Cryogenic Sleeping பத்தி நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலைன்னு ஒரு கொட்டு வச்சுருந்தாரு நண்பர் Senthilkumar Krishnan. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

க்ரையோஜெனிக் உறக்கம், தமிழ்ல சொல்றதுன்னா... உறைநிலைக்குளிர் உறக்கம் அல்லது கடுங்குளிர் உறக்கம்னு சொல்லலாமா? ஏன்னா, க்ரையோஸ் (kryos) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உறைநிலைக்குளிர்னு (icy cold) பொருள். இப்போதைக்கு நாம க்ரையோஜெனிக் உறக்கம்னே ஒலிபெயர்த்துக்குவோம். நுட்பப்படி இதனை Cryonic Suspensionனு சொல்வார்கள்.

இப்படி ஒரு முறை இருக்குன்னு நமக்கு திரைப்படங்கள் வாயிலாகத்தான் தெரியவந்துருக்கு. அதுவும் கடந்த 2014ம் வருடம் வெளிவந்த Interstellar திரைப்படத்துல இருந்துதான் பெரும்பாலானோர் இதைப்பத்தி பேசுறாங்க. 1993ல் நான் கல்லூரியில் படிக்கும்பொழுது Demolition Man என்றொரு படம் வந்தது. அதில் இந்த நுட்பம் குறித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பே 1992ல் Forever Young என்றொரு திரைப்படத்திலும் இதனைக் காட்டியிருப்பார்கள். இப்படியொரு நுட்பம் இருக்கின்றது என்று காட்டிய முதல் திரைப்படம் இதுதான்.

அதன் பின்னர் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஏலியன், பேட்மேன், ஜேஸன் எக்ஸ், கேப்டன் அமெரிக்கா, அண்டர்வேர்ல்டு என்று பல திரைப்படங்களிலும் இதனைக் காட்டியிருப்பார்கள். 1819ல் வாஷிங்டன் இர்வின் என்பார் எழுதிய ரிப் வான் விங்க்கிள் என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிகாட்டியிருப்பார்.

க்ரையோனிக் சஸ்பென்ஷன் பயன் என்ன?

தற்போதைய மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத, ஆனால், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் அதி தீவிரமாக இருக்கும்பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால், பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspensionல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டப்படி இறந்துவிட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?

Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக்கொள்வதுதான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

நம் உடல் அழிந்துபட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது. நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்திவைக்கப்படும். அப்படியொரு செயல்பாடுத்தான் இதில் மேற்கொள்ளப்படுகின்றது.

சரி, க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்றால் என்ன? எப்படிச் செய்கிறார்கள்?

க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சடாரென்று நிறுத்தி வைப்பது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும். அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant).

இனிதான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும். உடலையும் சடாரென்று குளிர்நிலைக்குக் கொண்டு போய்விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும். அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கிவிட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற்கலவையை உட் செலுத்துவார்கள். ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectantயை உற்பத்தி செய்து கொள்ளும்.

க்ளைகால்ஸ் (Glycols) எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும். எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.

எத்திலின் க்ளைக்கால் ஆட்டோமொபைலில் உள்எரி எஞ்சின்களில் குளிர்விப்பானாக தண்ணீருக்குப் பதிலாகவோ அல்லது தண்ணீருடன் கலந்தோ பயன்படுத்தப்படும். இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.

ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறைநிலைத்தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும். எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள். உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள்.

இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப்படுத்தப்படவில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.

மேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறைநிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள்.

எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்னவென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பதுதான். இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன் ஆழ்குளிர் நிலைக்கு (Deep Cooling without Freezing) உட்படுத்தி வளர்சிதை மாற்றம் நிகழ்வதில் இருந்து நிறுத்தி வைக்கும் முறைக்குப் பெயர்தான் Vitrification.

அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது. அதற்குப் பின்னர் -196°Celcius வெப்பநிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள். ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர்நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.

அவ்வளவுதான் க்ரையோனிக் சஸ்பென்ஷன். ஆனால், திருப்பி உயிர்ப்பிக்கும் நுட்பம்தான் இன்னும் நமக்குக் கைவரப்பெறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்று விஞ்ஞானிகளும் கூறிவிட்டனர். மீளுயிர்ப்பிப்பதில் என்னவொரு கடினம் என்றால், சரியான வெப்பநிலைக்கு படிப்படியாக உடல் செல்களைக் கொண்டு வராவிட்டால், பனிப்படிகங்கள் உருவாகி செல்களை விரிவடையச் செய்து சிதைத்துவிடும் என்பதுதான்.

ஆனால், நானோ தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டால், மிக நுணுக்கமாக அணுஅளவிலே போய்க்கூட செல்களைப் பாதுகாப்பாக மீளுயிர்க்கச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.

அப்படி எவரேனும் க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டிருக்கின்றார்களா....? ஆம், சிலர் அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  1. Dr. James Bedford, உளவியல் பேராசிரியர்
  2. Dick Clair Jones, தொலைக்காட்சி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
  3. Thomas K Donaldson, கணிதவியலார்
  4. Fereidoun M. Esfandiary (FM-2030), எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் மீவுமனிதத்துவச் சிந்தனையாளர் (Transhumanist Philosopher)
  5. Dora Kent, Alcor Life Extension Foundationன் ஒரு உறுப்பினரான Saul Kent என்பாரின் தாய்.
  6. Jerry Leaf. Alcor Life Extension Foundationன் துணைத் தலைவர்
  7. Ted Williams, பேஸ்பால் விளையாட்டு வீரர்
  8. John Henry Williams, Ted Williamsன் மகன், இவரும் பேஸ்பால் விளையாட்டு வீரர்.
  9. Walt Disney, கார்ட்டூனிஸ்ட், திரைப்படத் தயாரிப்பாளர், அசைபடத் தயாரிப்பாளர், குரல் நடிகர் மற்றும் தொழிலதிபர்

படம் எடுக்கப்பட்ட தளம் : https://transhumanity.net/wp-content/uploads/2014/09/Cryonics.jpg




Sunday, February 8, 2015

ஒளி ஆண்டு - வானவியல் அலகு


ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது?

கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு.

ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும்.

  • 1 நொடிக்கு = 299,792.458 கிலோமீட்டர்கள்
  • 1 நிமிடத்திற்கு = 299,792.458 x 60
    • = 17,987,547.48 கிலோமீட்டர்கள்
  • 1 மணிக்கு = 17,987,547.48 x 60
    • = 1,079,252,848.80 கிலோமீட்டர்கள்
  • 1 நாளைக்கு = 1,079,252,848.80 x 24
    • = 25,902,068,371.20 கிலோமீட்டர்கள்
  • 1 வருடத்திற்கு = 25,902,068,371.20 x 365.242
    • = 9,460,523,256,033.83 கிலோமீட்டர்கள்

அதாவது, ஒன்பது ட்ரில்லியன் நானூற்றி அறுபது பில்லியன் ஐநூற்றி இருபத்தி மூன்று மில்லியன் இருநூற்றி ஐம்பத்தாறு ஆயிரத்து முப்பத்து மூன்று (nine trillion four hundred sixty billion five hundred twenty-three million two hundred fifty-six thousand thirty-three) கிலோமீட்டர்கள்.

சுருக்கமாக = 9.4605284 × 1012 கிலோமீட்டர்கள்

தோராயமாக 9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் என்பதே ஒரு ஒளியாண்டு தூரமாகும்.

வானவியல் அலகு (Astronomical Unit-AU)

1 வானவியல் அலகு = 149,597,871 கிலோமீட்டர்கள்

அதாவது, பூமியின் மையப்பகுதிக்கும் சூரியனின் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவே ஒரு வானவியல் அலகு எனப்படும். பூமியானது சூரியனை ஒரு ஒழுங்கான வட்டத்தில் சுற்றி வராது நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தாலும், தோராயமான ஒரு மதிப்பை நாம் வானவியல் அலகாகக் கொள்கிறோம்.

பூமியானது தன் நீள்வட்டப்பாதையில் சூரியனுக்கு அருகே வரும் அண்மைநிலையின் (perehelion) போது இருக்கும் தொலைவையும், சூரியனுக்குத் தொலைவே இருக்கும் சேய்மை நிலையில் (aphelion) போது இருக்கும் தொலைவையும் கூட்டி அதனை இரண்டால் வகுத்து வரும் மதிப்பே இந்த வானவியல் அலகு.

சூரிய ஒளியானது பூமிக்கு வந்து சேர 8.3 நிமிடங்கள் ஆகும். எனவே,

1 வானவியல் அலகு = 8.3 ஒளிநிமிடங்கள் எனவும் சொல்லலாம்.

1 ஒளியாண்டு = 9,460,523,256,033.83 / 149,597,871 = 63,239.69 வானவியல் அலகுகள்

படம் எடுக்கப்பட்ட தளம் : http://www. spaceanswers.com/wp-content/uploads/2012/10/iod-universe-110411.jpg
http://www. school-for-champions.com/astronomy/images/astronomical_distances-au.gif